வறட்சியால் கால்நடை வளர்ப்பே கேள்விக்குறி.!! வேதனையில் விவசாயிகள்…

புதுக்கோட்டை: வறட்சி காரணமாக மாடுகளை வளர்க்க முடியாததால், புதுக்கோட்டை மாட்டு சந்தையில், மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் அதிகளவில் வந்துள்ளனர்.

தங்களின் அவலநிலை குறித்து பேசிய விவசாயிகள் “மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை. அதனால் மாடுகளை வைத்துப் பராமரிக்க முடியாமல் விற்று கொண்டிருக்கிறோம். குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களின் விலையும் அதிகரித்துவிட்டது. அவற்றை வாங்கிப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாங்கள் மாடுகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எங்கள் ஊரிலிருந்து மட்டும் ஐந்து மாடுகளை கொண்டு வந்துள்ளோம். அவற்றை ஒவ்வொரு ஊருக்கும் விற்பனை செய்வோம். வேறு வழியில்லை. மாடுகள் இல்லையென்றால் எங்கள் விவசாயமே பாதிக்கப்படும். மாடுகளை வைத்துத்தான் எங்கள் வாழ்வாதாரம் நடைபெறுகிறது.

இப்போதும் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். மாடுகள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. மழை பெய்யாததால் மாடுகளை விற்றுக்கொண்டே இருக்கிறோம். மழை பெய்த பிறகு மீண்டும் வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் எங்கள் எண்ணம்.

அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. மழை பெய்யவில்லை என்றால் அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? விவசாயக் கடன்களில் ஓரளவு தான் தள்ளுபடி வழங்குகிறார்கள். இருந்தாலும், பாதி தள்ளுபடி மட்டும் போதுமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் கால்நடைகளை யாராலும் வளர்க்க முடியாது. இறுதியில், எங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு வழியைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.” என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Related Stories: