தவெக அரசு அமைந்தது முதல் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு இல்லை மதுரை மாநகராட்சி வார்டுகள் தள்ளாட்டம்

* அன்றாடம் அவதிக்குள்ளாகும் மக்கள்

* வலம் வர முடியாமல் முடங்கிய கவுன்சிலர்கள்

மதுரை : தவெக ஆட்சி அமைந்தது முதல் மதுரை மாநகராட்சிக்கான வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதி துவங்கி பொது, திட்ட, சிறப்பு நிதியென எந்தவொரு நிதி ஒதுக்கீடுமின்றி 100 வார்டுகளிலும் ஒரு சிறு பணியும் நடக்காமல் மக்கள் அன்றாடம் அவதிக்குள்ளாகி தவியாய் தவித்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்கள் 100 வார்டுகளை கொண்டிருக்கிறது. ஏற்கனவே 72 வார்டுகள் இருந்த நிலையில் விரிவாக்கம் கண்டதை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் வாரந்தோறும் பல்வேறு நிதி ஒதுக்கீடு நடவடிக்கைகளால் வார்டுகள் தோறும் எண்ணற்ற பணிகள் நடந்தன. மாநகராட்சி நிதியுடன், பொது, திட்ட, சிறப்பு நிதிகளும் ஒதுக்கப்பட்டன.

எம்எல்ஏ, எம்பி, நிதிகளும் தாராளமாக மாநகராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வந்தது.ஒரு பணியும்செய்ய முடியலஇதனால் நகரெங்கும் பாதாள சாக்கடை துவங்கி குடிநீர், கல்வி, சாலை, பாலம், மருத்துவமனை, அங்கன்வாடி, மண்டபம் வரை வார்டில் எங்கு திரும்பினாலும் பணிகள் நடந்து வரும் நிலை இருந்தது.

ஆனால் தற்போது தவெக அரசு பொறுப்பேற்றது முதல் அடிப்படையான வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியே வழங்கப்படாத நிலை தொடர்கிறது. கடந்த திமுக ஆட்சி காலத்து நிதி ஒதுக்கீட்டு திட்டங்களையே, தாங்கள் காலத்து திட்டம் போல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் துவங்கி அடுத்தடுத்து திறப்பு விழா நடத்தி பெருமை பேசி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்து கமிஷனர்களாக இருந்த தினேஷ்குமார், சித்ரா விஜயன் உள்ளிட்டோரின் வரி வருவாயை பெருக்கும் அன்றைய நடவடிக்கைகள், தற்போது நல்ல வரிவசூல் பலன் தந்த போதும், மதுரையின் 100 வார்டுகளிலும் உரிய மாநகராட்சி நிதி ஒதுக்கீடு இன்றி கவுன்சிலர்கள் ஒரு பணியும் செய்ய முடியாததால், மொத்த மதுரையிலும் குண்டு குழி ரோடுகளும், பழுதான மின் விளக்குகளும், தெருக்கள்தோறும் கழிவுநீர் வெளியேறி சுகாதாரசீர்கேடும், குடிநீர் விநியோக குறைபாடுகளுடன், குப்பை மேலாண்மையிலும் திட்டமின்றி அடிப்படை வசதிகளையே பெற முடியாமல் மக்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர்.

தொய்வின்றி நடந்த பணிகள்

இதுகுறித்து மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில்தான் இப்போதும் கூட ஒரு சில பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலத்தில் திட்ட நிதிகள் அதிகளவில் வந்து சேர்ந்தது.

கவுன்சில் நிதியும் கிடைத்தது. தேர்தல் அறிவிப்பும், அதை தொடர்ந்தும் என கடந்த 5 மாதங்களாகவே ஒரு பைசாவும் நிதி ஒதுக்கீடு இன்றி ஒவ்வொரு வார்டிலும் ஒரு தெருவிளக்கு புகாரை கூட சரிசெய்ய முடியவில்லை.

கவுன்சிலர் மேம்பாட்டு நிதியே தேவைக்கேற்ப அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை ஒதுக்கீடு இருக்கும். மண்டலம் வாயிலாகவும் ரூ.5 லட்சம் வரை கூடுதல் நிதியும் பெறலாம். இப்போது எந்த நிதி ஒதுக்கீடுமின்றி வார்டுகள் அத்தனையிலும் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

வார்டுகளுக்குள் வலம் வர முடியாமல் முடங்கி போயிருக்கிறோம். மாநகராட்சி வரி வருவாயில் முன்னேற்றம் இருக்கிறது. பணம் செலுத்தாவிட்டால் அபராதம் என்பதால் மக்களே வரி செலுத்த முன் வருகின்றனர்.

வருவாய் இருப்பினும் வார்டு தேவைக்குரிய நிதி வழங்குவதை அரசும், அதிகாரிகளும் செயல்படுத்தவில்லை. ஒவ்வொரு கவுன்சிலரிடமும் பல பைல்களில் வார்டு பணிகள் குவிந்து கிடக்கிறது. முந்தைய ஆட்சி காலத்தில் கவுன்சிலர் லெட்டர் பேடில் விருப்ப நிதியை கேட்டு வழங்கி வார்டில் மக்கள் பணிகள் தொய்வின்றி நடந்தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போட்டி போட்டு நிதி ஒதுக்கி சாலைகள், கட்டுமானங்கள் என பணிகள் நடந்தன.

முல்லை பெரியாறு, டூரிப், சுற்றுச்சூழல் துவங்கி நகராட்சி நிர்வாகத்தின் திட்ட நிதி வரை ஏகப்பட்ட பணிகள் நிறைவேறின. இப்போது வார்டின் சாதாரண அடிப்படை வேலைக்கே நிதியின்றி அல்லாடுகிறோம். வார்டுதோறும் சாலைகள் மோசமாகி விட்டன. ரூ.10 லட்சத்திற்குள் போடும் சின்ன ரோடெல்லாம் மாநகராட்சி நிதியில்தான் போடலாம்.

மாநில அரசு நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில், மாநகராட்சி பொது நிதி ஒதுக்கீட்டை அமல்படுத்தி மக்களுக்கான அடிப்படை வசதிகளையாவது செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘நிதி ஒதுக்கீடு அறிவிப்பை கவுன்சில் கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மாநில நிதிக்கான கருத்துருக்கள் அனுப்பி வைத்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: