*சோளிங்கர் எம்எல்ஏ, குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தல்
திருப்பத்தூர் : பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சோளிங்கர் எம்எல்ஏ மற்றும் குண்டர்களை கைது செய்ய வேண்டி திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நாளிதழ் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது, சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் நேற்று முன்தினம் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பத்திரிகை நிருபர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் அவர்களுடன் இருந்த குண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற தாக்குதலில் காயமடைந்த அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர்.சுப்பிரமணி சோளிங்கரில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தவெக எம்எல்ஏ கபில் மற்றும் அவரது கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல்வருக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தினர்் கோரிக்கை மனு
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று ஆம்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற தினகரன், தினமலர் உள்ளிட்ட செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சோளிங்கர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயலை கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு பாகுபாடின்றி செயல்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி புகார் மனு அனுப்பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
