காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைபெரும்பாக்கம், மாகாணிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் ப்ரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக துரைப்பெரும்பாக்கம் ஊராட்சியில் எம்.டி. நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சமையலறை, உணவுப் பொருட்கள், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இதையடுத்து விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத கிராமப்புறம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாகாணிப்பட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு குழந்தைகளின் வருகை பதிவேடு, மற்றும் குழந்தைகளின் எடை உயரம், ஊட்டச்சத்து உணவு, உணவுப்பொருட்களின் இருப்பளவு, கழிவறை மற்றும் சமையலறையின் சுகாதாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் நூலக கட்டிடத்தில் ஊரக கட்டிடங்கள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.2.15 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், குப்பைகள் தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, ஈராளச்சேரி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம், வட்டார ஊராட்சி நிதி ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினார்.
பின்னர் காவேரிப்பாக்கத்தில் ஊரக, நகர்ப்புற சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, செல்வ விநாயகம், ஒன்றிய பொறியாளர் செவ்வந்தி, பணி மேற்பார்வையாளர் திவ்யா உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
