ஜிம்பாப்வே டி20 தொடர் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: சூரியவன்ஷி அதிரடி

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரின்ஸ் யாதவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் அஷோக் ஷர்மா, ஷிவம் துபேவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் சூர்யன்ஷ் ஷெட்கே இடம் பெற்றனர்.

ஜிம்பாப்வே அணியில் ரிச்சர்ட் என்காரவா காயம் காரணமாக விலகிய நிலையில், வெலிங்டன் மசகட்சா சேர்க்கப்பட்டார். வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் ஷர்மா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த தொடரில் தனது வழக்கமான அதிரடியை காட்ட முடியாமல் தடுமாறி வந்த அபிஷேக், 4 பந்தில் 2 ரன் மட்டுமே எடுத்து முஸரபானி வேகத்தில் விக்கெட் கீப்பர் மருமானி வசம் பிடிபட்டார்.

அடுத்து வைபவ் – இஷான் கிஷன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர். இஷான்29 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) எடுத்து சிக்கந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வைபவ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. 31 பந்தில் அரை சதம் அடித்து சர்வதேச டி20ல் 16 வயதுக்குள்ளாக ஒன்றுக்கு மேற்பட்ட அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை வசப்படுத்திய சூரியவன்ஷி 81 ரன் (49 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

ஷ்ரேயாஸ் 27, ரிங்கு சிங் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. திலக் வர்மா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சில் எவன்ஸ் 2, சிக்கந்தர், முஸரபானி, வெஸ்லி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் மட்டுமே எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைத் தழுவியது.

கடைசி வரை போராடிய ரியான் பர்ல் ஆட்டமிழக்காமல் 54 ரன் (43 பந்து, 5 பவுண்டரி) விளாசினார். வெஸ்லி 28, பென் கரன் 20, டியான் மையர்ஸ் 19, பிராட் எவன்ஸ் 14 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மயாங்க் யாதவ் 3, யஷ் தாகூர் 2, அஷோக் சர்மா, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

Related Stories: