ஜிம்பாப்வேயுடன் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஹராரேவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச… மயாங்க், பிரின்ஸ், பிஷ்னோய் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஜிம்பாப்வே அணியால்ல் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா, இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 18 பந்தில் அரைசதம் விளாசி உலக சாதனை படைக்க 13.2 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து வென்றது.

இஷான் 35, கேப்டன் ஷ்ரேயாஸ் 28* ரன் எடுத்தனர். ஷ்ரேயாஸ் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக 7 போட்டியில் வெற்றியை ருசிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கணக்கை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வென்று 2-0 என முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

சூரியவன்ஷி, அபிஷேக், இஷான், ஷ்ரேயாஸ், திலக், ரிங்கு, ஷிவம் துபே என அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால் ஜிம்பாப்வே பவுலர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அதே சமயம் ஜிம்பாப்வே அணியின் 6 அடி, 8 அங்குல உயர வேகப் பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸரபானி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். கடந்த போட்டியில் அவர் தனது முதல் 2 ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

முஸரபானியின் 3வது ஓவரில் சூரியவன்ஷி 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இதனால் 2வது போட்டியில் இவர்கள் இடையேயான மோதல் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் போட்டியில் 4 வேகங்களுடன் களமிறங்கிய ஜிம்பாப்வே இன்று இடது கை சுழற்பந்துவீச்சாளர் வெலிங்டன் மசகட்சாவை களமிறக்கலாம். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியாவும், பதிலடி கொடுத்து 1-1 என சமநிலை ஏற்படுத்த ஜிம்பாப்வேயும் வரிந்துகட்டுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: