ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் பழநியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தவெக அரசைக் கண்டித்து கோஷம்

 

பழநி: பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், தவெக அரசைக் கண்டித்தும், அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் கடந்த 6ம் தேதி தனியாருக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பத்திரப்பதிவு நடந்து 19 நாட்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நிலம் மோசடியாக விற்பனை நடந்தது குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்த நிலையில், ஆளும் தவெக அரசு தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள சிபிசிஐடி மூலம் கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என அதிமுக குற்றம்சாட்டியது.

மேலும், விசாரணையின் போக்கு மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. எனவே, முறைகேடாக பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்தும், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பழநியில் மயில் ரவுண்டானா முன்பு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார். பழநி எம்எல்ஏ ரவி மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, நிர்வாகிகள் ஆர்விஎன் கண்ணன், ராஜ்மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: