பைக்காரா அணையில் படகுகளுக்கு வெகு நேரம் காத்திருக்கும் பயணிகள்

*போதிய படகுகள் இயக்க நடவடிக்கை தேவை

ஊட்டி : பைக்காரா அணையில் போதிய படகுகள் இயக்கப்படாததால் வெகுநேரம் சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருகின்றனர்.

இவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக மாநில பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். ஊட்டி படகு இல்லத்திற்கு சென்று அங்கு படகு சவாரி மேற்கொள்கின்றனர்.

குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, கூடலூர் போன்ற மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா மையங்களுக்கும் சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழித்தடத்திலேயே வருகின்றனர். அவ்வாறு வரும் அவர்கள் பைக்காரா அணை பகுதியில் உள்ள படகு இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு படகு சவாரி மேற்கொள்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல், கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவு இங்கு வருகின்றனர். இங்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையில் இயக்கப்படும் மோட்டார் படகுகள் மற்றும் வேகமாக இயக்கப்படும் படகுகளில் பயணிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், பைக்காரா அணையில் பெட்ரோல் மற்றும் டீசல் படகுகள் இயக்குவதன் மூலம் தண்ணீர் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக அங்கு இயக்கப்பட்டு வந்த படகுகளுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் வேகமாக இயக்கப்படும் மோட்டார் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் படகுகளையும் பேட்டரி கொண்டு இயக்கும் படகுகளாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 3 படகுகள் மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் பயணிக்க இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள படகுகள் எரிவாயு சிலிண்டரில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 3 படகுகள் மட்டுமே இருப்பதால் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பணிகள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்படுகிறது. குறைந்த படகுகள் மட்டுமே இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடனுக்குடன் படகுகள் கிடைப்பதில்லை. அவர்கள் படகுக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மழை மற்றும் வெயில் காலங்களில் படகிற்காக சுற்றுலா பயணிகள் அங்குள்ள படகு தளங்களிலும், நடைபாதைகளிலும் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பைக்காரா படகு இல்லத்தில் உள்ள அனைத்து மோட்டார் படகுகளையும் பேட்டரிகளை கொண்டு கொண்டு இயங்கும் படகுகளாக மாற்ற வேண்டும். போர்க்கால அடிப்படையில் சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: