நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்து கொலை சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவில் சிறைக்குள் நடந்த வியாபாரி சபரிவர்மன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நேற்று தொடங்கியது. குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்று திறனாளி வியாபாரியான இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக தென்தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கபடப்டார். அங்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நேசமணிநகர் போலீசார் கொலை வழக்கு பதிந்து சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் விசாரித்தால், முழு பின்னணி முழுமையாக தெரியாது. எனவே வழக்கை உடனடியாக சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தற்போது சபரிவர்மன் கொலை வழக்கை, தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் விசாரணை அதிகாரியாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, நேற்று டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேசமணிநகர் காவல் நிலையத்தில், சபரிவர்மன் கொலை வழக்கில் சேகரித்த முதற்கட்ட ஆவணங்கள், வாக்குமூல பதிவுகள், தடயங்களை கேட்டு பெற்றனர்.

மேலும், 3 குழுக்களாக பிரிந்து சபரிவர்மன் வீட்டில் அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமும், கொலை சம்பவம் நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலை, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிறைச்சாலையில் விசாரணை மற்றும் சம்பவம் நடைபெற்ற சிறை அறையில் கேமரா மூலமும் பதிவு செய்தனர்.

 

Related Stories: