குளித்தலை ஜூலை 21: குளித்தலை பெரிய பாலம் எரிவாயு மயானம் அருகே, இறந்தவர்கள் பயன்படுத்தியதை உடமைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுவதால், மாசு ஏற்படுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய பாலம் பரிசல் துறை பகுதியில் திருச்சி-கரூர் புறவழிச் சாலை மேம்பாலம் போடப்பட்டது. அதனை தொடர்ந்து மேம்பாலம் இரு பகுதியிலும் அணுகு சாலை போடப்பட்டு வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் குளித்தலை நகரத்திற்கு செல்லும் வகையில் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் காலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கும் இந்த பரிசல் துறையில் அணுகு சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் குளித்தலை பெரிய பாலம் பரிசல் துறை பகுதியில் நகராட்சி மூலம் எரிவாயு மின் மயானம் அமைக்க அதற்கான நிதி பெறப்பட்டு தேவையான உபகரணங்கள் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் குளித்தலை நகராட்சி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இறந்தவர்கள் உடலை இந்த எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இறந்தவர்கள் உடல் பல நாட்கள் வீட்டில் நோயாளிகளாக இருந்து அவர்கள் பயன்படுத்தும் துணிமணிகள் வீட்டிலிருந்து அலங்கார வாகனத்தில் கொண்டு வரும்போது எடுத்து வருகின்றனர்.
இறுதி சடங்கு முடிவதற்கு முன்பு அங்கே அருகில் உள்ள இடங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இந்நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதி வழியாக காலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. காரணம் இறந்தவர்கள் பயன்படுத்திய துணிமணிகள் பூக்கள் அங்கே வீசிவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் தெரு நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளையும், இறந்தவர்களுக்காக பயன்படுத்தப்படும் இறுதி கழிவுகளையும் இப்பகுதியில் கொட்டாமல் இருப்பதற்கும், தொடர்ந்து இந்த பகுதியை தூய்மையாக வைத்திருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
