சென்னை: தமிழ்நாட்டில் திடீர் மின்கட்டண உயர்வால் குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணத்தைப் பார்த்த மக்கள், இன்னும் அந்த ஷாக்கில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களில், வீடுகள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் மற்றும் பயன்பாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வருவது மின் நுகர்வோரிடையே பெரும் கவலையையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ரூ.700 முதல் ரூ.900 வரை வந்து கொண்டிருந்த மாதாந்திர மின் கட்டணம், பயன்பாடு பெரியளவில் மாறாத சூழலிலும் திடீரென ரூ.4,000க்கு மேல் உயர்ந்துள்ளது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரில் அல்லது குறிப்பிட்ட வீடுகளில் மட்டும் நடக்கும் சம்பவமல்ல; மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் இதேபோன்ற மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின் கணக்கீடு மற்றும் கட்டண அமைப்பில் உள்ள சில நடைமுறை மற்றும் தொழில்நுட்பப் பிரச்னைகளே மாநிலம் தழுவிய அளவில் இத்தகைய திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைகின்றன. வீடுகள் பூட்டியிருக்கும் வேளையில் நேரில் ஆய்வு செய்யாமல் முந்தைய கால பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோராயமான யூனிட்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதேவேளையில், ஆள் இருக்கும் வீடுகளிலும் கணக்கீட்டாளர்கள் ரீடிங் எடுப்பதில் தாமதம் செய்வதாலும் அல்லது சில யூனிட்டுகளை கூடுதலாகக் கணக்கிடுவதாலும் கட்டணம் பல மடங்கு உயர்கிறது.
குறிப்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களில் 60 சதவீதமும், ஆய்வாளர் பணியிடங்களில் 42 சதவீதமும் காலியாக உள்ளதால், போதிய பணியாளர்கள் இன்றி கள ஆய்வுகள் சரிவர நடப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. தவறான கணக்கீடு, தாமதமான ரீடிங் மற்றும் பழுதான மீட்டர்களால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, தவறு செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளதுடன், பிழையற்ற கணக்கீட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண அமைப்பில், பயன்பாடு 500 யூனிட்டுகளை தாண்டும் போது ஒரு யூனிட்டுக்கான கட்டண விகிதம் பல மடங்கு உயர்கிறது. கணக்கீட்டின் போது தவறாக அல்லது தாமதத்தால் சில யூனிட்டுகள் கூடுதலாகப் பதிவானாலும் கூட, பில் தொகை ரூ.900லிருந்து நேரடியாக ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை எகிறி, குடும்பங்களின் மாதாந்திர வரவு-செலவு திட்டத்தை தலைகீழாக மாற்றுகிறது.
மேலும், புதிதாக வாடகைக்கு குடிவருபவர்கள் வீடு பூட்டியிருக்கும் பட்சத்தில், அந்த வீட்டின் முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்திய அதிகப்படியான மின் கட்டணக் கணக்கீடே புதியவர்களுக்கும் தோராய பட்டியலாகப் பதிவேற்றப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. தவறாகக் கணக்கிடப்பட்டு வரும் மின் கட்டணத்தைச் சரிசெய்வதற்கு நுகர்வோர்கள் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு பலமுறை அலைந்து திரிந்து மனு அளிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் இரவில் ஏசியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் இயல்பான பயன்பாடு சற்று அதிகரிக்கும் போது, தற்போதைய அடுக்கு கட்டண முறையினால் மொத்தத் தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து அனைத்து தரப்பு நடுத்தரக் குடும்பங்களுக்கும் பெரும் நிதிச் சுமையாகவும் மன உளைச்சலாகவும் மாறியுள்ளது. அதே சமயம் இந்த திடீர் கட்டண உயர்வால் வாடகை வீட்டில் வசிபோர்கள் அதிகமாக மின்சாரம் உபயோகிப்பதாக உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்போர்கள் இடையே சண்டை எழுந்து வருகிறது. ஒரே மீட்டரை பகிர்ந்து கொள்ளும் வீடுகளில் தோராயக் கணக்கீட்டினால் கட்டணம் உயரும் போது, தொகையைப் பிரித்துக் கட்டுவதில் தினமும் மோதல்கள் வெடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
* மின்கட்டணம் உயர்வு: அமைச்சர் ஒப்புதல்
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது கடுமையான கண்டனத்திற்கு உரியது. விளாத்திகுளம் எம்எல்ஏ பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்குப் பேசியதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேகதாது தொடர்பாக முதற்கட்டமாக சட்டவல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அடுத்தகட்ட முடிவுகள் இன்னும் ஒருசில வாரங்களில் எடுக்கப்படும்.பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மீண்டும் ஆய்வு செய்யுங்கள் என்று பொதுவாக வெளியிட்ட சுற்றறிக்கையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
தாம்பரத்தில் ஒருசில இடங்களில் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளதாகச் சொல்லியுள்ளார்கள். மீண்டும் அந்த பகுதிகளில் மின் அளவீடு செய்யச் சொல்லியுள்ளோம். அளவீட்டாளர்கள் பற்றாக்குறை உள்ளது. 5,500 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 800 பேர்தான் உள்ளார்கள். மின் பயன்பாட்டு அளவீடு எடுப்பவர்கள் தவறு செய்திருந்தால், மீண்டும் அளவீடு எடுத்துவிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளோம். இதுவரைக்கும் தவறுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கூடுதலாக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அது டெபாசிட்டாகக் கருதப்பட்டு, அடுத்த முறை மின்கட்டணத்தின்போது கழித்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
