*நிர்வாக சீர்கேட்டை தடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
ஈரோடு : கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நிர்வாக சீர்கேட்டை தடுக்ககோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஏமகண்டனூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயிலில் நிர்வாக சீர்கேட்டை முற்றிலும் அகற்ற வேண்டும். கோயில் பகுதியில் பரிகாரம் என்ற பெயரில் முறையின்றி பணம் பறிக்கின்றனர். செயல் அலுவலர், அலுவலர்கள், குருக்கள், புரோக்கர்கள் போன்றோர் சேர்ந்து பக்தர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலகத்துக்கு வராமல், கோவில் தங்கும் விடுதியிலேயே இருப்பதால், தவறு செய்வோருக்கு சாதகமாகிறது. தற்காலிக கொட்டகை அனுமதி இன்றி அமைத்து, பரிகாரம் செய்வதாக செயல்படுவதை தடுக்க வேண்டும்.
கொடுமுடி நகரிலும், கோயில் இடம், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அனைத்து பணியாளர்கள், குருக்கள், கோயில் சார்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். போலி நபர்கள், புரோக்கர்கள் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பூட்டி கிடக்கும் மருத்துவமனை: ஈரோடு நாடார்மேடு ரயில்வே காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடாசலம் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,“ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலம் 54வது வார்டில் நேதாஜி வீதி மரப்பாலத்தில் மாநகராட்சி சார்பில் ஆயுர்வேத மருத்துவமனை 60 ஆண்டாக செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு மருத்துவர், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என பணி செய்தனர்.
தினமும் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றும், 100க்கும் மேற்பட்டோர் மருந்துகள் வாங்கி பயன் பெற்றனர். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, அம்மருத்துவமனை பல 100 பேருக்கு கசாயம் காய்ச்சி வழங்கியதை, மக்கள் நினைவு கொள்வார்கள். கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன் அங்கு பணி செய்த மருத்துவர் ஓய்வு பெற்றதால், மருத்துவமனை மூடப்பட்டது. மீண்டும் புதிய டாக்டர் நியமிக்கப்படவில்லை.
இங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பல ஆயிரம் பேர், ஆயர்வேத மருந்து கிடைக்காமல் தவிக்கின்றனர். அதே பகுதியில் மீண்டும் பழைய கட்டமைப்புடன், ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.குடிநீர், தெரு விளக்கு வசதி இல்லை:
ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் திருமகள் நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனுவில், திருமகள் நகரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில், பள்ளி செல்லும் குழந்தைகள் 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது வரை பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி எதுவும் செய்து தரவில்லை. நாங்கள் முறையாக சொத்து வரி, குடிநீர் கட்டணம் என எதுவும் நிலுவை இல்லாமல் செலுத்தி வருகிறோம்.
தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால், பள்ளி சென்று வீடு திரும்புவதில் சிரமம் உள்ளது. மக்களும் இரவு நேர பயணம் செய்ய இயலாத சூழல் உள்ளது. தற்போது எல் நினோ தாக்கத்தினால் பருவமழை பெய்யாத காரணத்தினால் போர்களிலும் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. எனவே, எங்களது அத்தியவசிய மற்றும் குழந்தைகளின் நலன் கருதி குடிநீர் மற்றும் தெரு விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
430 மனுக்கள் : ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தார் சாலை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இலவச வீட்டுமனை பட்டா, தனிப்பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, தெரு விளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 430 மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் சம்பந்தப்பட்ட உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் ஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, சமூக நீதித்துறை அலுவலர் சுடலைமணி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
