சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு போதிய அளவில் காவிரி நீர் திறக்காததால் உருவாகியுள்ள நிலைமை, அதன் காரணமாக தமிழகத்தில் ஏற்படக்கூடிய குடிநீர் மற்றும் வேளாண்மை, குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான நீர் தேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முன் தமிழ்நாட்டின் சட்டநிலையை மேலும் வலுப்படுத்துவது, தேவையான தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சட்ட ஆவணங்களை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, சட்டத்துறைச் செயலாளர் சுமதி, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டு, நிலைமையை விரிவாக மதிப்பீடு செய்தனர்.
