சென்னை: எத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதனை விற்பனை செய்யக் கூடாது. விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான அறிவிக்கையை ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதுவரை ஷெட்யூல் கே எனப்படும் பிரிவின் கீழ் தளர்வுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஆல்கஹால் கொண்ட மருந்துகள், இனி ஷெட்யூல் ஹெச் 1 என்ற வகைப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வாய்வழியாக உட்கொள்ளும் அனைத்து மருந்துகளும் இந்த புதிய விதிகளுக்கு உட்பட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள், அதற்கான பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதும் புதிய விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருமல், சளி மற்றும் வேறு சில பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் குறிப்பிட்ட அளவு எத்தில் ஆல்கஹால் சேர்க்கும்போது அவை நிவாரணியாக செயல்படுகின்றன. சில உற்பத்தியாளர்கள் அதிக எத்தில் ஆல்கஹாலை பயன்படுத்தி மருந்துகளை தயாரிப்பதும், அவை போதைக்காக பயன்படுத்தப்படுவதும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, மருந்துகளில் ஆல்கஹால் பயன்பாடு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள ஏதுவாக அதுகுறித்த கருத்துருக்கள் பெறப்பட்டன.
அதன் அடிப்படையில் 12 சதவீதத்துக்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை இனி தன்னிச்சையாக வாங்கவோ, விற்கவோ முடியாது என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழலில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 ஜனவரி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இந்த விதிகள், நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தாது என்றும் அதேவேளையில், மருந்துகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
