தூத்துக்குடி: தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும். கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆலயம் அருகேயுள்ள மைதானத்தில் அமைக்கப்படவுள்ள பொருட்காட்சிக்கான அரங்குகள், மின்வசதிகள் மற்றும் பிற கட்டமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இடம்பிடிப்பது தொடர்பான தகராறில் மற்றொரு தரப்பின் டியூப் லைட், சேர்களை அடித்து நொறுக்கிய தவெக-வைச் சேர்ந்த கிழக்கு பகுதி செயலாளர் திவாகர் மற்றும் தவெக நிர்வாகி அண்டோ உள்ளிட்ட 10 பேர் அங்கு வந்து பணியில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திடீர் சம்பவத்தால் பொருட்காட்சி திடலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தென்பாகம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின்னர், பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில், தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த மோதலுக்கான பின்னணி, சேதத்தின் அளவு மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தூத்துக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
