பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு விஐபிக்களுக்கு தொடர்பு? பதிவுத்துறை அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி அதிரடி விசாரணை

 

பழநி: பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எஸ்பி சாஜிதா இன்று அதிரடி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த முறைகேட்டில் விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் அடிவாரம், ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த இடம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. இந்த நிலத்தை முருகதாஸ் என்பவர் சேதுபதி மற்றும் வெள்ளைத்துரை ஆகியோருக்கு கடந்த 6ம் தேதி ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பழநி கோயில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்ற வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது அடிவாரம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கையாக ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம், இஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் ஆவணங்கள், கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி போலீசாரிடம், பழநி அடிவாரம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.இதையடுத்து நேற்று மாலை பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள நிலங்கள் பிரிவுக்கு சென்று, பிரச்னைக்குரிய நிலத்தின் ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து நிலம் தொடர்பாக, கோயில் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விவரங்கள், மேல்முறையீட்டு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் பிரச்னைக்குரிய நிலத்தின் அமைவிடம், எல்லைகள், இடத்தின் சந்தை மதிப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், 2வது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார், கோயில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட ஆவணங்கள், நிலத்தின் மூலப்பத்திரம், நிலத்தின் உரிமையாளர் எழுதி கொடுத்த தானசெட்டில்மென்ட் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் முருகானந்தம் உள்பட 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா இன்று அதிரடி விசாரணை நடத்தினார்.

மேலும், இது தொடர்பாக தலைமறைவான முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா இன்று பழநிக்கு வந்து சார்பதிவாளர் அலுவலகம், கோயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பத்திரப்பதிவு குறித்து பூர்வாங்கமாக நடந்த விசாரணையில், ‘பத்திரப்பதிவுக்காக ஆவணங்கள் கொடுத்தபோது, பழனி சார்பதிவாளர் அதை வாங்கியுள்ளார்.

ஆனால் தள்ளுபடி செய்யாமல், நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்று விட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் உதவியாளராக உள்ள ஜஸ்டின் மணிகண்டனை ஒரு நாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்குச் சென்று விட்டார்.

இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. விஐபிக்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்தினால், கண்டிப்பாக இந்த பதிவுக்குப் பின்னால் இருக்கும் விஐபி யார் என்பது தெரிந்து விடும். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். சசிகலா, கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் மாற்றப்படாமல் இருந்துள்ளார்.

எந்த அதிகாரிகள் வந்தாலும் அவர் மட்டும் மாற்றப்பட மாட்டார். இவருக்கு பல ஐஏஎஸ், அரசியல் பிரமுகர்கள் பின்புலமாக இருப்பதாக கூறப்படுகிறது. சர்வ செல்வாக்கு படைத்தவராக சசிகலா இருந்து வந்தார். இவர்தான் இந்த பதிவுக்கு பக்கபலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரமும் தெரியவரும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: