கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன் (34) என்பவரின் வீட்டிற்கு, சமீபத்தில் அந்த பெண்ணின் 6 வயது மகள் டிவி பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அய்யப்பன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அச்சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், அச்சிறுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் கங்காமித்ரா, அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அய்யப்பன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லையை மறைக்க முயன்றதாக சிறுமியின் தாயிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.
