இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பைக் பறிமுதல்

சென்னை: சென்னை அடையார் ஓஎம்ஆர் சாலை மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்தார்.

இதற்கு சமூக வலைத்தள பக்கத்தில் பொதுமக்கள் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வலியுறுத்தினர். அதைதொடர்ந்து, மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்(22) மற்றும் முகமது உசேன்(22) என்றும், இவர்கள் இருவரும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘கவாசாகி இசட் 900’ வகை பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: