புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளுடன் எம்பிக்கள் போராட்டம், தர்ணா நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மக்களவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ல் தொடங்கி, ஆக., 13 வரை நடக்க உள்ளது. இதில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை தொடர்பான 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதே சமயம் 23 லட்சம் மாணவர்களின் கனவை நசுக்கிய நீட் வினாத்தாள் கசிவு, 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பிரச்னையை ஏற்படுத்திய சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் நடந்த குளறுபடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, ஈரான்-அமெரிக்கா போரில் 13 இந்தியர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
இதையடுத்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், பதாகைகளை ஏந்துதல், மதச் சடங்குகளை நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று எம்பிக்களுக்கு மக்களவைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
* செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அவதூறான சித்திரங்கள், படங்கள் மற்றும் முழக்கங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதை எம்பிக்கள் தவிர்க்க வேண்டும். மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது.
* நாடாளுமன்றக் கூட்டங்களின்போது அவைக்கு உறுப்பினர்கள் செல்வதில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்துவதால், நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயில்களுக்கு முன்னால் போராட்டங்களையோ அல்லது ஆர்ப்பாட்டங்களையோ நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* மக்களவை சபாநாயகரின் வழிகாட்டுதல்களில் உள்ள விதி 124ஏ(2)-ன் அடிப்படையில் எம்பிக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றக் கட்டிடத்தில் உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, கட்டிட நுழைவாயில்களில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதும் அவசியமாகும். இதற்கு எம்பிக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.
* எந்தவொரு மதச் சடங்கையும் நடத்துவதற்காகவோ அல்லது ஆர்ப்பாட்டம், தர்ணா அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றுக்காகவோ அவையின் வளாகத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
* நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள பகுதிகள் மற்றும் பாதைகள் எம்.பி.க்களின் பயன்பாட்டிற்கு எவ்விதத் தடையும் இன்றி தடையின்றி இருக்க வேண்டும் என்பதற்காக, வளாகத்திற்குள் பல செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
* நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிகள், பதாகைகள், பதாகை அட்டைகள், லத்திகள், ஈட்டிகள், வாள்கள், தடிகள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் எம்பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 9. 30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
