கூடங்குளம் அணு உலையின் முக்கிய தரவுகள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு: அணு சக்தி நிலையத்துக்கு ஆபத்தா?

பெங்களூரு: தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு, விநியோகம் தொடர்பான முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ளது.ரஷ்ய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஏழு அணு உலைகள் கூடங்குளத்தில் செயல்படுகின்றன.

வேர்ல்ட் லீக்ஸ் என்ற ஹேக்கர்கள், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த 19 ஆயிரம் ஆவணங்களை டார்க் வெப்பில் பதிவிட்டு உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3வது மற்றும் 4வது யூனிட்டில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்திடம் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், அணுமின் நிலையத்தின் வரைபடங்கள், விநியோக விவரங்கள், காற்றோட்டம், குளிரூட்டும் அமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுப்பாட்டு அறையின் தரைத்தளம் போன்ற தகவல்கள் அடங்கியுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகையில், தங்களது சர்வரில் இருந்து தகவல்கள் ஓரளவு திருடப்பட்டு உள்ளது. இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. ஆனால் என்ன தகவல்கள் கசிந்துள்ளன என்பதை கூற அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. கடந்த 2016 முதல் 2025 மே மாதம் வரையில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த தகவல்கள் 2027 ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வர உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4வது யூனிட்டை சேர்ந்தவை.

இது குறித்து இந்திய அணு சக்தி மின் வாரியத்துடன் இணைந்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. முக்கிய தரவுகள் கசிந்துள்ளது அணு உலையின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அணு சக்தி நிபுணரான நிக்கோலஸ் ரோத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கசிந்த கோப்புகள், ஒரு எதிரிக்கு இந்தத் திட்டத்தை யார் அணுகுகிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அந்த அணுகல் எந்தெந்த கணினி அமைப்புகளைச் சென்றடைகிறது என்பதையும் காட்டக்கூடும் என்றார்.

Related Stories: