லக்னோ: “அயோத்தி ராமர் கோயிலில் உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டன” என சபாநாயகர் கூறிய சர்ச்சை கருத்துக்கு சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து உத்தரபிரதேச சபாநாயகர் சதீஷ் மஹானா, “கோயிலுக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகளை திரும்ப கேட்பவர்கள் உண்மையான பக்தியுடன் காணிக்கை செலுத்தியிருக்க மாட்டார்கள். அப்படி உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டிருக்கலாம்” என பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சதீஷ் மஹானாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் பிரிவு தன் எக்ஸ் பதிவில், “அயோத்தி ராமர் கோயிலுக்கு உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டிருக்கலாம் என சபாநாயகர் சதீஷ் மஹானா சொல்கிறார். அப்படியெனில், இதில் அரசின் தோல்வி ஏதுமில்லை. பக்தர்களின் நோக்கத்தில்தான் தவறு இருப்பதாக அவர் கூறுகிறார். அப்படியெனில் பாஜ அரசு இனி மக்களின் நம்பிக்கைகளை தணிக்கை செய்ய போகிறதா” என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், “உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகள் துணிச்சலாக செயல்படுகின்றனர்.
ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் இத்தகைய விசித்திரமான வாதங்களை முன் வைக்கின்றனர்” என குற்றம்சாட்டி உள்ளது. சதீஷ் மஹானாவின் பேச்சு குறித்து சமாஜ்வாடி கட்சி தன் எக்ஸ் பதிவில், “அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்த சபாநாயகர் சதீஷ் மஹானாவின் கருத்துகள் மிகவும் அவமானகரமானவை. கண்டிக்கத்தக்கவை. அவர் சபாநாயகர் என்ற பதவிக்குரிய கண்ணியத்துடன் பேச வேண்டும்.பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாட கூடாது. அவர் இத்தகைய கருத்துகளை வௌியிடுவதை தவிர்க்க வேண்டும்” என விமர்சித்துள்ளது.
