ஜனவரி – மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: அரசாணையை பின்பற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: தமிழ்நாட்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என்ற அரசாணையை முறையாக பின்பற்றுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மின்னல்குடிபட்டியைச் சேர்ந்த விக்னேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள காளியாத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு விழா கடந்த மே மாதம் நடந்தது. வழக்கப்படி, அடுத்தடுத்து இரண்டு முறை ஜல்லிக்கட்டு நடத்தும் நடைமுறை எங்கள் கிராமத்தில் இல்லை. சில தனிநபர்கள் ஜூலை 17ல் மற்றொரு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.

சட்டப்படி ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். உரிய அனுமதியின்றி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த போட்டியை தடுத்து நிறுத்துமாறு சிவகங்கை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், தமிழ்நாட்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி என்ற அரசானையை முறையாக பின்பற்ற வேண்டும். இதனை கலெக்டர் மற்றும் எஸ்பி முறையாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: