வாஷிங்டன்: வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ முகாம்களை தரைமட்டமாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமான தளத்தில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை தங்களது வெடிபொருள் ஏந்திய ட்ரோன்கள் முழுமையாக அழித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், குவைத்தின் அகமது அல்-ஜாபர் விமான தளத்தில் இருந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த ரேடார் நிலையத்தையும், ஜோர்டானின் இளவரசர் ஹாசன் விமான தளத்தில் இருந்த அமெரிக்காவின் கட்டளை மையத்தையும் ஈரானிய ஏவுகணைகள் தாக்கி அழித்ததாக ஈரானிய காவல்படை குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், ஈரான் காவல்படையின் இந்த கடுமையான சேத விபரங்கள் குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் மத்திய கட்டளை தலைமையகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்களது வான் எல்லைக்குள் சைரன் ஒலிகள் முழங்கியதை ஒப்புக்கொண்ட போதிலும், வான்வழி பாதுகாப்பு கட்டமைப்புகள் மூலம் ஈரானின் அச்சுறுத்தல்கள் பெருமளவில் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன. வான்வெளியிலேயே ஈரானிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட சிதறல்களால் தங்களது நாடுகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தற்போதைய தகவல்களில் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது வளைகுடா பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானின் கடல்வழி தாக்குதல் திறனை பலவீனப்படுத்தும் நோக்கிலான துல்லியமான தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் தலையீடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பல் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. ஈரானிய ராணுவ தளபதி இதுகுறித்து கூறுகையில், ‘வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் நடவடிக்கைகளின் மூன்றாவது கட்டமாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் என்ன பாதிப்பு?
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்ததை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 முதல் 4 சதவீதம் வரை திடீரென அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.2 முதல் 4.4 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78.35 டாலர் முதல் 79.36 டாலர் வரையிலும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலை 3.4 சதவீதம் அதிகரித்து 73.62 டாலர் முதல் 74.57 டாலர் வரையிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த ராணுவ மோதல்கள் தொடர்ந்து நீடித்து, முக்கிய கடல் போக்குவரத்து பாதை நீண்ட நாட்களுக்கு முடக்கப்பட்டால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் முதல் 125 டாலர் வரை உயரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதம் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவிற்கு, இந்த விலை உயர்வு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த காலங்களைப் போலன்றி தற்போதைய சூழலை எதிர்கொள்ள இந்தியா வியூக ரீதியாக தயாராக உள்ளது; ரஷ்யா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியை அதிகரித்ததன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான இறக்குமதியை 30 முதல் 45 சதவீதம் வரை இந்தியா குறைத்துள்ளது. மேலும், அவசர தேவைகளுக்காக 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி எரிவாயு இருப்பையும், 45 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி எரிவாயு இருப்பையும் இந்தியா சேமித்து வைத்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தினால் அது பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
