பெரம்பலூரில் களமிறங்கிய வடமாநிலத்தவர்கள் ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் பாதசாரிகளை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பயிற்சி பெற்ற வடமாநில வாலிபர்களைக் கொண்டு வலைவிசிப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதோடு, 484 நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனுசனை கடித்த கதையாக கிராமப்புறங்களில் கூறப்பட்டு வரும் முதுமொழிக்கு முக்கிய உதாரணமாக மாறிவிட்ட தெரு நாய்கள் பல்வேறு கிராமங்களில் பட்டிகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்த மாடுகளை ஆடுகளை கடித்து, கடைசியில் தெருக்களில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை, பொது மக்களை கடிப்பதோடு இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிப்பதோடு மட்டுமன்றி, சறுக்கி விழச் செய்து விபத்துகளுக்கும் காரணமாக தெரு நாய்கள் திகழ்ந்து வருகின்றன.

மேலும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகர, கிராமப் பகுதிகளில் நுழையும் புள்ளி மான்களை கூட்டமாக விரட்டிச் சென்று கடித்துக் குதறுவதால் மான்கள் மடிந்துபோகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி அனுமதியின் பேரில், குரும்பலூர் பேரூராட்சியில் கடந்த 2,3 தேதிகளில் பாளையம், குரும்பலூர், புதூர், மேட்டாங்காடு பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 50 தெரு நாய்களைப் பிடித்து கீழப்புலியூர் கால்நடை மருந்தகத்தில் கருத்தடை செய்தும் தடுப்பூசி போட்டும் ஒன்றிரண்டு நாட்களில் அதே பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரம்பலூர் நகராட்சியில் பல்வேறு வார்டு பகுதிகளில் நாய் பிடிக்கும் பயிற்சி பெற்ற வடமாநில இளைஞர்களை கொண்டு பாதசாரிகளை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை நைலான் வலைகளைக் கொண்டு லாவகமாகப் பிடித்து, அதற்குரிய வேனில் அடைத்துச் சென்று, புது பஸ்டாண்டு அருகே உள்ள கால்நடை மருந்தக வளாகத்திலும், ஆத்தூர் சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகேவுள்ள கால் நடைகளுக்கான தடுப்பூசி போடும் கொட்டகையிலும் அடைத்து, மருத்துவர்களைக் கொண்டு நாய்களுக்கு கருத்தடை செய்தும் தடுப்பூசி போட்டும் மூன்று நாட்களில் வலைவீசிப் பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர்.

இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் தற்போது ஒரே வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டுள்ளது. 484 நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி நாய்களுக்கு கருத் தடை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்குகளில் கோரிக்கை மனுக்கள் அளித்துக் காத்திருந்த பெரம்பலூர் நகரவாசிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சற்று நிம்மதியை அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இதற்காக மாவட்டக் கலெக்டருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: