கெங்கவல்லி அருகே அனுமதியின்றி வாரந்தோறும் ஜல்லிக்கட்டு நடத்தி வந்தது அம்பலம்

*போலீஸ் சுற்றிவளைப்பால் ஓட்டம்

ஆத்தூர் : கெங்கவல்லி அருகே ஏரிக்கரையில் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதியின்றி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தி வந்த நிலையில், நேற்றைய போட்டிக்காக 100க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபடி வீரர்கள் தயாராக இருந்த நிலையில், போலீசார் சுற்றிவளைத்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா ஆணையம்பட்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வாடிவாசல் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை என தெரிகிறது.

இந்நியைில், நேற்று காலை முதலே ஜல்லிக்கட்டு மைதானத்தில் இளைஞர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார், எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும ்தனிப்படை காவலர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும், மாடுபிடி வீரர்கள் மற்றும் விழா நடத்தும் குழுவினர் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துக் கொண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது, சிலர் அங்குள்ள முள்வேலியில் மறைந்து கொண்டனர். யாரும் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து விட்டனர். விசாரணையில், கடந்த 2 வாரங்களாக அப்பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசாருக்கு தெரியாமல் போட்டி நடத்தி மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசு வழங்கி வந்துள்ளனர்.

நேற்றைய போட்டியின்போது போலீசாருக்கு தகவல் கிடைத்து, சுற்றி வளைத்தால், ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: