கோவை: தவெக ஆட்சி முடியும் போது தமிழ்நாட்டின் கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும். இந்த ஆண்டு மட்டும் தவெக அரசு ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்கும் என பொள்ளாச்சியில் நடந்த முதல் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இதில், அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 2031ம் ஆண்டு ஒரு ஆட்சி மாற்றம் வரும். மதுவிற்கு பலர் அடிமையாக உள்ளனர். பெண்களுக்கு நடக்கும் கொடுமையில் மது உள்ளது.
மது பழக்கம் அடிப்படையில் இருந்து ஒழிக்க வேண்டும். மது, போதை ஒழிப்பு அரசு, காவல்துறை செய்யாது. தவெக ஆட்சி வந்த பிறகு, ‘‘ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை? ரெண்டு வெளு வெளுத்து விடுங்கள்’’ என்று நிறைய பேர் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்ரு சொல்ல விரும்புகிறேன். 2026 தேர்தலில் ஒரு கோடியே 68 லட்சம் பேர் வாக்களத்து அந்த கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு மரியாதை கொடுப்பது நமது கடமை. தவெக எம்எல்ஏக்கள் தட்டு தடுமாறி ஆட்சிக்கு வந்து உள்ளனர். தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளது.
4 லட்சம் 40 ஆயிரம் கடன் ஒவ்வொரு ரேசன் அட்டை மீது உள்ளது. தவெக இந்த வருடம் ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்க தான் போகிறது. நான் சொல்லுவதை எழுதி வைத்து கொள்ளுங்கள். தவெக 5 ஆண்டு ஆட்சி முடிவில் 15 லட்சம் கோடி கடனாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாநாட்டில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தளங்கள் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் எதிர்ப்பு குழுக்கள் இல்லாத பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடுத்த 3 மாதங்களில் போதைப் பொருள் எதிர்ப்பு குழுக்களை அரசு உருவாக்க வேண்டும். கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருள்கள் தமிழகத்தில் இல்லாத நிலை உருவாக்க வேண்டும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதோடு, மாவட்டந்தோறும் போதைத் தடுப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* செயற்கையாக ஏற்படுத்திய தள்ளுமுள்ளு
வீ த லீடர்ஸ் இயக்கத்தின் மாநாடு பில்டப்பாக இருந்தது. கூட்டமே இல்லாத மையப்பகுதியில் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் கூட்டமாக சேர்ந்து அண்ணாமலையை தள்ளுமுள்ளு செய்து அழைத்து வந்தார்கள். பார்வையாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அழைத்து வரும் போது ஏன் தள்ளுமுள்ளு செய்ய வேண்டும் என போலீசார் கேட்டு புலம்பினர்.
* எல்லாம் வெளியூர் ஆட்கள் தான்
மாநில மாநாடு என மாநில அளவிலிருந்து கூட்டம் கூட்டமாக ஆட்களை வரவழைத்து இருந்தனர். பார்க்கிங் ஏரியாவில் வெளி மாவட்ட பதிவு எண்களுடன் வாகனங்கள் வந்திருந்தது. யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை என சொல்லிவிட்டு மாவட்டம் வாரியாக கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். பாஜவில் இருந்து வெளியே வந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் இதற்கான செலவு மற்றும் ஏற்பாடுகளை வெளிப்படையாக செய்திருந்தனர்.
* பாஜவின் பி டீமா?
‘‘பாஜ நான் சார்ந்திருந்த கட்சி. பாஜவில் இருந்து அதிகம் பேர் இங்கு வந்துள்ளனர். பாஜவில் இருந்து ஏன் நான் வெளியே வந்தேன். பாஜவின் பி டீம் என என்னை பேசி வருகின்றனர். இந்த வீத லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாற போவது உறுதி சரியான நேரத்தில் மாறும்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.
