சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சென்னை: வீரன் அழகுமுத்து கோன் 269வது குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்படும். இதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர். அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அவரவருக்குரிய விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருங்கால இளைஞர்களின் வாழ்வியலையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வரும் மக்களுக்கு அதனுடைய மேச்சக்கால் புறம்போக்கு நிலங்களையும், மந்தைவெளி நிலங்களையும், அதற்குண்டான நீர்நிலைகளையும் அரசு பாதுகாத்து இந்த சொத்துகளை தனி நலவாரியம் அமைத்து பராமரிக்க வேண்டும்.
இந்தியாவின் முதல் உளவுத்துறை தலைவர் டி.ஜி.சஞ்சீவி பிள்ளை உளவுத்துறையின் முதல் இந்திய இயக்குநராக ஒரு தமிழர் அமர்ந்தது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இவரின் நினைவாக சென்னையில் உள்ள உளவுத்துறை அலுவலகத்திற்கு ‘சஞ்சீவி பிள்ளை மாளிகை’ என பெயரிட வேண்டும். தமிழகத்தில் இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வியில் முன்னேற முடியாத யாதவ சமுதாய மக்களுக்கு வாரிய தலைவர்கள், தேர்வாணை குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் போன்ற பதவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Related Stories: