லால்குடி அருகே பெண் பலாத்கார கொலை; கொலையாளியை கைது செய்ய கோரி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியல்

லால்குடி: லால்குடி அருகே பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து நெடுங்கூரில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் கணவருடன் சேர்ந்து விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மாடு வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வீட்டு அருகே உள்ள மாட்டு ெகாட்டகைக்கு சென்ற பெண்ணை மர்மநபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஏரியின் நடுவே உள்ள முட்புதரில் கட்டி வைத்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். ஆனால் இதுவரை கொலையாளிகளை சிக்கவில்லை. இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நெடுங்கூரில் இன்று காலை பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சிறுகளப்பூர், பெருகளப்பூர், அருந்தலைப்பூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், தாத்தம்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2,000 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவழிகளிலும் அமர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.தகவலறிந்து வந்த எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: