சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரை இழந்த நிலையில், இன்று நடைபெறும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக, அயர்லாந்து அணியுடன் நடந்த தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்ததால் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடந்த 4வது போட்டியில் இந்தியா களமிறங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 80 ரன் விளாசினார் (49 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்). துபே 22, வைபவ் 15, அபிஷேக் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், ஜோஷ் டங் தலா 2, ஜாக்ஸ், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 13,5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
பட்லர் 8 ரன்னில் அவுட்டானார். சால்ட் 59 ரன் (42 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹாரி புரூக் 79 ரன்னுடன் (35 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். புரூக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அயர்லாந்துக்கு எதிராக 0-2, இங்கிலாந்துக்கு எதிராக 0-3 என தொடர்ச்சியாக 2 டி20 தொடர்களை இழந்துள்ளதால் உலக சாம்பியனான இந்திய அணி பெரும் தலைக்குனிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து இந்தியா மோதும் கடைசி டி20 போட்டி சவுத்தாம்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றிக்கு குறிவைக்கும் நிலையில், இங்கிலாந்து 4-0 என வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்குகிறது.
