3வது இளைஞர் ஒருநாள் போட்டி: இலங்கை-யு19 கடைசி பந்தில் த்ரில் வெற்றி

அம்பாந்தோட்டை: இந்தியா-யு19 அணியுடனான 3வது இளைஞர் ஒருநாள் போட்டியில், இலங்கை-யு19 அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மகிந்தா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை யு19 அணி முதலில் பந்துவீச… இந்தியா யு19 அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன் குவித்தது.

வி.கே..வினீத் அதிகபட்சமாக 131 ரன் (136 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), லக்ஷியா ராய்சந்தானி 61 ரன் (63 பந்து, 7 பவுண்டரி) விளாசினர். இலங்கை யு19 தரப்பில் செத்மிகா 4, கிம்ஹன் மெண்டிஸ் 2, கவிஜா கமகே 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை யு19 அணி 40 ஓவரில் 215 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது. எனினும், சமிகா ஹீனதிகலா கிம்ஹன் மெண்டிஸ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்க்க, ஆட்டம் விறுவிறுப்பானது.

கிம்ஹன் 23 ரன் எடுத்து 48வது ஓவரில் வெளியேற, இந்தியா யு19 வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹீனதிகலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசியதுடன் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இலங்கை யு19 அணிக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். ஹீனதிகலா 84 ரன் (68 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), லதேண்ட்ரா ஆகாஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை யு19 அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related Stories: