புதுடெல்லி: பிஎப் வட்டி வரும் 15ஆம் தேதிக்குள் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் 8.25ஆக தொடர்வதாக அறிவித்த ஒன்றிய அரசு கடந்த ஜூன் மாதமே வரவு வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் காலதாமதம் ஏற்பட்டதால் இன்னும் வரவு வைக்கப்படவில்லை.
அதனால் பிஎப் வட்டி எப்போது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஜூலை 15-க்குள் 8.25% வட்டி வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎப் கணக்கு வைத்துள்ள சுமார் 34 கோடி உறுப்பினர் கணக்குகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட 8.25 சதவீத விகிதத்தில் ஆண்டு வட்டி கணக்கிடப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்பின் கீழ் வட்டி கணக்கிடும் பணிகளைத் தொடங்கியுள்ளதால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பாஸ்புக்குகளில் வட்டி வரவு வைக்கப்படுவதை ஜூலை 15-க்குள் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வட்டித் தொகை ரூ. 1.44 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* புதிய மாற்றங்கள் அறிமுகம்
விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு, இறுதி பிஎப் தீர்வுகள் மீதான வட்டி கணக்கிடப்படும் முறையையும் மாற்றுகிறது.
* முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை மட்டுமே வட்டி கணக்கிடப்படுவதற்குப் பதிலாக, இனி பணம் செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் தேதி வரை வட்டி கணக்கிடப்படும்.
* பகுதி அளவில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளையும் எளிதாக்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே இருந்த 13 வகைகளை மூன்று முக்கிய பிரிவுகளாகக் குறைத்துள்ளது. 1. அவசியத் தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி மற்றும் திருமணம் போன்றவை) 2. வீட்டுவசதித் தேவைகள். 3. சிறப்புச் சூழ்நிலைகள்
* புதிய அமைப்பு மூலம் பிஎப் உறுப்பினர்கள் தங்கள் மொத்த பிஎப் இருப்பில் 75 சதவீதம் வரை திரும்பப் பெறவும் முடியும்.
* ஆதார் இணைப்புடன் கூடிய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொண்ட பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் சேமிப்பு நிதியை மாற்றிக்கொள்ள இனி தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இத்தகைய பரிமாற்றங்கள் இனி தானாகவே தொடங்கப்பட்டு முடிக்கப்படும்.
* ஓய்வூதியப் பணம் செலுத்தும் முறையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மண்டல அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் ஓய்வூதியக் கோரிக்கைகளுக்கான தொகையை, இனி நாடு முழுவதும் உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிலும் வரவு வைக்க முடியும்.
