பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி மறுப்பால் மன உளைச்சலில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

 

நாகப்பட்டினம், ஜூலை 8: முழுபயிர் கடன் தள்ளுபடி செய்யாததால் மன உளைச்சலில் உயிரிழந்த நாகை விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் மணிபாரதி , சென்னை தலைமை செயலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு தாலுகா பிரிஞ்சிமுளை கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் (58) என்ற சிறு விவசாயி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் ரூ.85 ஆயிரம் பெற்றிருந்தார். தமிழக முதல்வர் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு கடன் தள்ளுபடி என அறிவித்தார்.

வெறும் பத்தாயிரம் ரூபாய் கூடுதலாக கடன் பெற்றதற்காக முழு கடன் தள்ளுபடி இல்லை என்ற அரசு அறிவிப்பால் விவசாயி சோமசுந்தரம் மன உளைச்சல் அடைந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கம் சார்பில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் 5ம் தேதி அதிகாலை பெரும் மன வேதனையில் சோமசுந்தரம் திடீரென உயிரிழந்த சம்பவம் விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் பாரபட்ச வரையறைகளினால் விவசாயியின் உயிர் பிரிந்து விட்டது என்பதை அரசு உடனடியாக எண்ணிப் பார்த்து , தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி சிறு குறு விவசாயிகளுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்க வேண்டும்.

மன உளைச்சலால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த சோமசுந்தரம் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Related Stories: