கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: கண்டுகொள்ளாத வனத்துறையை கண்டித்து விவசாயி தர்ணா

 

கடையநல்லூர்,ஜூலை 8: கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை நாசமாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி கடையநல்லூர் வனத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மா, பலா, தேக்கு, வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. சொக்கம்பட்டி பீட் பகுதியில் திரிகூடபுரம் முருகன் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்தில் தென்னை மற்றும் மா மரங்கள் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 1 வாரமாக சுமார் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வேலிகளை சேதப்படுத்தி தென்னந்தோப்பிற்குள் புகுந்து அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி அதன் குருத்துக்களையும் தின்று விட்டு சென்றது.

யானைகள் நடமாட்டம் குறித்து விவசாயி முருகன் பலமுறை கடையநல்லூர் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயி முருகன் நேற்று காலை தென்னை குருத்து ஓலைகளை அள்ளிக் கொண்டு வந்து வனச்சரக அலுவலகத்தில் நுழைவாயில் முன்பு சாலையில் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் வனத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து கலைந்து சென்றார்.

ரூ.50 ஆயிரத்திற்கு ரூ.500 மட்டுமே இழப்பீடு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் கூறுகையில் ‘‘கடந்த ஒரு வாரமாக எனது தென்னை தோப்பிற்குள் யானைகள் புகுந்து வேலியையும் உடைத்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து கடையநல்லூர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. தினசரி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் வனத்துறையினர் சேத இழப்பீட்டு தொகையாக ஒரு மரத்திற்கு வெறும் 500 ரூபாய் தான் தருகின்றனர்’’ என்றார்.

பொதுவாக 4 வழிச்சாலை பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அதில் உள்ள தென்னை மரத்திற்கு ஒரு மரத்திற்கு 45 ஆயிரம் ரூபாய் நெடுஞ்சாலை துறையினர் வழங்குகின்றனர். ஆனால் காட்டு யானைகள் விவசாயிகளின் தென்னை மரத்தை சேதப்படுத்தினால் வனத்துறையினர் ஒரு மரத்திற்கு 500 ரூபாய் தான் வழங்குகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வழங்குவது போல வனத்துறையினரும் ஒரு மரத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு மரத்திற்கு 45 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Stories: