புளியங்குடி, ஜூலை 8: புளியங்குடி பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு நகராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து குடிநீர் சீராக விநியோகப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, பஜனைமடத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சரிசெய்யப்படவில்லை. இதனால் அதில் இருந்து வீணாக வெளியேறிய குடிநீர் சாலைகளில் தேங்கிநின்றது. அத்துடன் ஒரு சிலபகுதிகளில் கழிவுநீரும் சேர்ந்து தேங்கியதால் சுகாதார சீர்கேடு நிலவியதோடு சாலையும் சேதமடைந்து வந்தது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் சூழலும், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 3ம்தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக கள ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையாளர் விஜயகுமார், நகரின் சேதமடைந்த பைப் லைனை சீரமைத்து தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் விநியோகம் செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புளியங்குடி பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு நகராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து குடிநீர் சீராக விநியோகப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், இதற்காகக் குரல்கொடுத்த தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.
