ஊட்டி-குன்னூர் இடையே தினசரி மலை ரயில் அக்.5 வரை நீட்டிப்பு

ஊட்டி: ஊட்டி-குன்னூர் இடையே தினந்தோறும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயில் அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-குன்னூர், ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 7ம் தேதி துவங்கி அக்டோபர் 5ம் தேதி வரை அனைத்து நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் குன்னூரில் மதியம் 1:40 மணிக்கு புறப்பட்டு 2:50 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மாலை 3:10க்கு புறப்பட்டு 4:20க்கு குன்னூர் சென்றடையும். இதேபோல் ஊட்டி-குன்னூர் இடையே வாராந்திர சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 10ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை அனைத்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு 3:55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

மறு மார்க்கமாக ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 9:20 மணிக்கு புறப்பட்டு 10:45 மணிக்கு ஊட்டி சென்றடையும். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே வரும் 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மேட்டுப்பாளையத்தில் காலை 9:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:25 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும். ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஆகஸ்ட் 3ம் தேதி வரை அனைத்து சனி, திங்கள் கிழமைகளில் மட்டும் காலை 11:25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும், குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடன் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: