சென்னை போராட்டத்தில் பங்கேற்றவர் முழு கடன் தள்ளுபடி மறுப்பால் மன உளைச்சலில் விவசாயி சாவு: வேதாரண்யம் அருகே சோகம்

வேதாரண்யம்: சென்னையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய விவசாயி மன உளைச்சலில் நேற்று உயிரிழந்த சம்பவம் வேதாரண்யம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சிமுளை கிராமத்தை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம் (67). இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சோமசுந்தரத்துக்கு, சுமார் 10 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவர், கூட்டுறவு வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து 85 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தமிழக அரசு ரூ.75 ஆயிரம் வரையுள்ள கடன் மட்டுமே தள்ளுபடி என அறிவித்ததால் ரூபாய் பத்தாயிரம் கூடுதலாக கடன் பெற்றதற்காக தனக்கு தள்ளுபடி இல்லை என்பதால் மன உளைச்சலில் சோமசுந்தரம் இருந்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட சோமசுந்தரம் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு சொந்த ஊர் திரும்பினார். ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சோமசுந்தரம் வீட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பெற்ற பயிர்கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையை எண்ணி வருந்தி மனவேதனை காரணமாக விவசாயி சோம சுந்தரம் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கமல்ராம் கூறுகையில், தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடி திட்டத்தால் பயிர்க்கடன் பெற்ற பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் பயன் பெற இயலாத நிலையில், தேர்தல் வாக்குறுதிபடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்திட வேண்டி விவசாயிகளின் போராட்டம் தமிழகம் முழுமைக்கும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தலைஞாயிறு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கத்தில் தான் வாங்கிய பயிர்க்கடன் 85 ஆயிரம் ரூபாய் தற்போதைய தள்ளுபடி திட்டத்தில் இடம் பெற வில்லையே என்ற மன உளைச்சல் காரணமாக சோமசுந்தரம் உயிரிழந்திருப்பது விவசாயிகளின் தற்போதைய பரிதாப நிலையை முழுமையாக எடுத்துரைக்கிறது. சோமசுந்தரம் போன்ற லட்சக்கணக்கான பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இதே போன்ற மனவலியை சுமந்து போராடி வருகிறார்கள்.

தமிழக முதல்வர் மேலும் காலதாமதம் செய்யாமல் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து மேலும் இதுபோல் ஒரு துயரம் நடைபெறாமல் விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும். உயிரிழந்த சோமசுந்தரம் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: