வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் ஏழு பேர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட முடிவு, அதானி குழுமம் அமெரிக்காவில் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்துடன் தொடர்புடையது என்பதை அமெரிக்க நீதித்துறை மறுத்துள்ளது. இந்தியாவில் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்குகளைத் திரும்பப் பெற அமெரிக்க நீதித்துறை முடிவு செய்து, அதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய நியூயார்க் மாவட்ட நீதிபதி மறுத்துவிட்டார். வழக்கை திரும்ப பெறுவதற்கான காரணங்களை ஜூலை 13ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவை அடுத்து துணை அட்டர்னி ஜெனரல் டிரென்ட் மெகாட்டர் தாக்கல் செய்த மனுவில், அமெரிக்காவில் பணத்தை முதலீடு செய்வதாக அளித்த வாக்குறுதியின் காரணமாகவே, நான் பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரினேன் என்று கூறியுள்ளனர். அது பொய் ஆகும்.
முதலீடுகள் குறித்து எந்தக் குறிப்புகளும் இருந்தபோதிலும், பத்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய நான் கோரியிருப்பேன். மேலும் இந்தப் பிரச்னை எழுப்பப்படுவதற்கு முன்பே வழக்கை கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
