வேலைக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம்; காதல் மனைவியை கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: வேலைக்கு செல்ல மறுத்ததால் காதல் மனைவியை கொலை செய்து, கணவன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் 2வது வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.அப்போது வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (27), ஸ்ரீமதி (19) என்பதும், இவர்கள் கடந்த ஓராண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூர் கருமாரம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது.சரவணக்குமார் திருப்பூரில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப் ஒன்றிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், பி.எஸ்சி நர்சிங் படித்த ஸ்ரீமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. பொருளாதார பிரச்னைகளால் மனைவியை வேலைக்கு செல்ல வற்புறுத்தி சரவணக்குமார் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், ஸ்ரீமதியின் நடத்தையில் சந்தேகித்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சரவணக்குமார் மனைவியை பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். ஸ்ரீமதியின் உடலில் பூரிக்கட்டையால் தாக்கிய காயமும் இருந்தது. மேலும், மனைவியை கொன்ற பின்னர் அவர் மட்டும் நேற்று முன்தினம் மதியம் வரை வீட்டிற்கு வெளியே நடமாடினார். அதன் பிறகு சரவணக்குமார் வெளியில் வரவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனால், சரவணக்குமார் 3 நாட்களுக்கு முன்பே மனைவியை கொன்று விட்டு ஏதாவது நாடகமாடி போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் திட்டம் தோல்வியில் முடிந்ததால் சரவணக்குமார் நேற்றுமுன்தினம் மதியத்திற்கு பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். ஸ்ரீமதி இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் அவர் உடல் அழுகி கிடந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 நாட்கள் சடலத்துடன் தூங்கிய கணவர்
வெல்டிங் தொழிலாளியான சரவணக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார். மேலும், ஸ்ரீமதி 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையியிலும் கடந்த வாரம் சரவணக்குமார் குடித்து விட்டு வந்து பயங்கரமாக சண்டையிட்டுள்ளார். அவரது அடி உதையை தாங்க முடியாமல் கர்ப்பிணியான ஸ்ரீமதி 1ம் தேதியே வீட்டிற்குள் உயிரிழந்துள்ளார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை வீட்டிற்குள்ளேயே போட்டு விட்டு கடந்த 3 நாட்களாக வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்ததும் பிணத்தின் அருகே படுத்து தூங்கி உள்ளார். மனைவியின் உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியதும் தாம் சிக்கிக்கொள்வோம் என பயத்தில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: