சென்னை: தமிழ்நாட்டின் நிர்வாக அதிகாரம் தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டுமே அன்றி, ஆளுநர் மாளிகையில் அல்ல என்பதை நினைவூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்லேகரின் அத்துமீறலுக்கு தவெக அரசு அதிர்ச்சியூட்டும் அமைதியைக் கடைப்பிடிப்பது ஏன். தமிழகத்தில் பாஜக வின் “பின்வாசல் ஆட்சி” திட்டத்தின் புதிய முகமாக ஆளுநர் அர்லேகர் செயல்பட தொடங்கியுள்ளார். தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக, ஆளுநர் பதவியை பயன்படுத்தி தமிழக நிர்வாகத்தில் தலையிட முயல்வது கூட்டாட்சி அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகார எல்லைக்குள் வெளிப்படையாக தலையிட்டு, மதுரையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கே நேரடியான சவாலாகும்.
இதற்கு ஒரு படி மேலே சென்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர்,“நான் வைகையை பார்த்தேன். நதி இருக்கிறது; ஆனால் தண்ணீர் எங்கே. யாரும் வைகையை
சீரமைக்கவில்லை என்றால், லோக் பவனே தலையிடும்,” என்று அவர் பேசியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்காத அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்தி இணை அரசு நடத்தும் இந்த போக்கை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மதுரையில் ஆளுநர் ஆர்லேகர் அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டிருப்பதும், வைகையை ஆளுநர் நிர்வாகமே சீர்படுத்தும் என்பது ஒரு மரபு மீறலாக மட்டுமல்ல; மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகார வரம்புக்குள் நுழைந்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக மாறும்.
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு இன்று அதிர்ச்சியூட்டும் அமைதியை கடைப்பிடிப்பது ஏன்? “மாநில உரிமை”, “கூட்டாட்சி”, என்று அரசியல் மேடைகளில் முழங்குபவர்கள், ஆளுநரின் வெளிப்படையான அத்துமீறலுக்கு முன் மவுனம் காப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
ஒன்றிய அரசின் அரசியல் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், இந்த மவுனம் ஒப்புதலாகவே பார்க்கப்படும். மாநில உரிமைகளை பாதுகாக்கத் தவறும் எந்த அரசும், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமையை இழந்து விடும்.
தமிழகத்தின் நிர்வாக அதிகாரம் தலைமை செயலகத்தில் இருக்க வேண்டுமே அன்றி, மக்கள் மாளிகை என்று தற்போது அழைக்கப்படும் ஆளுநர் மாளிகையில் அல்ல என்பதை நினைவூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் அதிகாரம் கிண்டி ஆளுநர் மாளிகையில் அல்ல தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் த வெ க அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்பாக உள்ளது.
