சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு பெற்றோருடன் தூங்கிய 8 வயது சிறுமி கடத்தல்: போதை ஆசாமி கைது

 

சென்னை, ஜூலை 3: சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, போதை ஆசாமியை போலீசார் கைது செய்து, சிறுமி மீட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி ஜூன்தா தாஸ் (46) மற்றும் மகன் சன்ஜித் தாஸ் (32), எட்டு வயது மகளுடன் திருச்சியில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதற்கிடையே தனது சொந்த மாநிலத்திற்கு செல்ல குடும்பத்துடன் ஷனிஜல் தாஸ் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். அந்த நேரத்தில் ரயில் கிடைக்காததால், இரவில் புறநகர் ரயில் நிலையம் முன்பு உள்ள நடை பாதையில் தனது குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கழித்து கண்விழித்து பார்த்த போது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 8 வயது மகள் மாயமானது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், பல இடங்களில் மகளை தேடி வந்தார். இதற்கிடையே, வால்டாக்ஸ் சாலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு போதை ஆசாமி ஒருவர், சிறுமியை தோளில் போட்டுக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போதை ஆசாமியை மறித்து பேசினார். அப்போது போதை ஆசாமி தமிழில் பேசினார். சிறுமியை எழுப்பி பேச்சுகொடுத்த போது, அவர் இந்தி மொழியில் பேசினார். இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர், உடனே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யானைக்கவுனி போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தார்.

அதன்படி போலீசார் போதை ஆசாமியிடம் விசாரணை நடத்திய போது, சிறுமியை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தூக்கி கொண்டு வந்ததாக கூறினார். உடனே போலீசார் போதை ஆசாமியை அழைத்து கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷனிஜல் தாஸ் தனது மகளை காணவில்லை என்று தேடி கொண்டிருந்தார். இதை கவனித்த போலீசார், சிறுமியை காட்டி உங்கள் குழந்தையா என கேட்டபோது, சிறுமியும் எனது தந்தை என இந்தியில் கூறினார். அவரது தந்தையும் தனது குழந்தை என கூறினர்.

பிறகு போலீசார் குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போதை ஆசாமியை பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பொன்னேரியை சேர்ந்த சசிகுமார் (42) என்றும், பெயின்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

 

Related Stories: