கோவையின் மூலக்காடு கிராமத் தொட்டியில் தண்ணீர் குடித்த ஒற்றை யானை: பழங்குடியினர் எடுத்த ‘கியூட்’ வீடியோ வைரல் !!!

கோவை: கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பழங்குடியின கிராமத்தில், கொளுத்தும் கோடை மற்றும் தாகத்தைத் தணிக்க ஒற்றைக் காட்டு யானை ஒன்று தண்ணீர் தொட்டியில் இருந்து தாக தீரத் தண்ணீர் குடிக்கும் அழகிய வீடியோ காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ​கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தடாகம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சி, மூலக்காடு என்ற கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது. அடர்ந்த காப்புக் காடுகள் நிறைந்த இப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களுக்குள் வருவது வழக்கம்.

​இந்நிலையில், இன்று பிற்பகல் மூலக்காடு பழங்குடியினர் (ஆதிவாசி) குடியிருப்பின் அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுத் தண்ணீர் தொட்டிக்கு ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வந்து உள்ளது. தனது நீண்ட தும்பிக்கையைத் தண்ணீர் தொட்டிக்குள் விட்டு, தாகம் தீரத் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தது. பின்னர் சாவகாசமாகத் தண்ணீர் குடித்து முடித்த அந்த யானை, கிராம மக்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல், வந்த வழியே மீண்டும் அடர்ந்த காட்டுக்கு உள்ளேயே நடந்து சென்றது.

​காட்டு ராஜா தண்ணீர் குடிக்கும் இந்த அபூர்வ மற்றும் நெகிழ்ச்சியான காட்சியை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் தங்களது செல்போனில் மிக அழகாக வீடியோ பதிவு செய்து உள்ளனர். பொதுவாக யானைகளைக் கண்டு மக்கள் அலறி ஓடும் நிலையில், இந்த வீடியோவில் யானை மிகவும் அமைதியாகத் தனது தாகத்தைத் தணித்துக் கொள்ளும் ‘கியூட்’ காட்சிகள் பார்ப்போரைக் கவரும் வகையில் உள்ளது. இந்த வீடியோ தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Related Stories: