செங்கல்பட்டு: செங்கல்பட்டு, நத்தம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). இவர், தனது வீட்டின் வாசல்படி அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை எடுப்பதற்காக ஜெயக்குமார் வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த இன்வெர்ட்டரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த திடீர் சிலிண்டர் வெடிப்பில் சிக்கி வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் (64), சண்முகம் (70) மற்றும் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், சிலிண்டர் வெடித்த வேகத்தில், அருகில் இருந்த கார் மற்றும் ஏசி மெஷின் போன்றவை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, மின்கசிவினால் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.
