நெல்லை ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்

சென்னை: 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தல் போது ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் சுமார் ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேரிடம் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்பட்ட நிலையில், அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.

இந்த விவாகரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், அந்த கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், சேகர் உட்பட 13 பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.

இதையடுத்து அவர்கள் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக இன்று நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்பட 11 பேர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட கோவர்தன் விக்னேஷ் என்ற கணேஷ் இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி சுந்தர பாண்டியன், சம்பந்தப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் எனவும் கூறினார்.

 

Related Stories: