×

மோசடிக்கு வழிவகுக்கும் அச்சத்திற்கு மத்தியில் வாட்ஸ்அப் யூசர்நேம் வசதியை அமல்படுத்த ஒன்றிய அரசு தடை: மெட்டா நிறுவனம் விளக்கமளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: ஆள்மாறாட்டம், மோசடிக்கு வழிவகுக்கும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் வாட்ஸ்அப் யூசர்நேம் (பயனர்பெயர்) வசதியை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்ணுக்கு பதிலாக அனைத்து பயனர்களுக்கு யூசர்நேம் வழங்க இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் எண் தெரியாமல், யூசர்நேம் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது தனியுரிமை அதிகரிப்பதே இந்த வசதியின் நோக்கமாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புதிய அம்சம் ஆள்மாறாட்டம், மோசடிக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பயனர்கள் உண்மையான அரசு முகமைகள் மற்றும் பிற நிறுவனங்களின் பெயர்களை போன்ற யூசர்நேம்களை பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்கலாம் என கருதப்படுகிறது.

இது பொது பாதுகாப்பு மற்றும் சமூகத்திற்கு பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற கவலைகள் பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் யூசர்நேம் வசதி குறித்து ஆராய்ந்து வருவதாக ஒன்றிய அரசு தரப்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பில் அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்றும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம் குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் யூசர்நேம் அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் மெட்டா நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளது.

Tags : Union government ,WhatsApp ,Meta ,New Delhi ,
× RELATED குதிரை பேர புகார் அமித்ஷாவுடன் ஆளுநர்...