×

குதிரை பேர புகார் அமித்ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?

சென்னை: குதிரை பேர புகார் எதிரொலியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் நேற்று சந்தித்துப் பேசினார். இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னதாக 35 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக இருந்தது.

ஆனால் கட்சித் தாவல் நடவடிக்கை வரும் என்பதால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர். இந்தநிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் குதிரை பேரத்தில் அரசே ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் மதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் விஜய்யே ராஜினாமா செய்யச் சொன்னதாகவும், தானே பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைக்கப்போவதாகவும் கூறினார் என வைகோ தெரிவித்தார். இதனால் குதிரை பேரத்தில் முதல்வர் விஜய்யே ஈடுபட்டதாக வைகோ ஒப்புக் கொண்டார். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அமித்ஷா அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் நடைபெறும் குதிரை பேர விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்தும் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Governor ,Arlekar ,Amit Shah ,CBI ,Chennai ,Home Minister ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED கர்நாடகாவில் கனமழை; தட்சிண கன்னட...