அயோத்தி: ராமர் கோயில் நன்கொடை மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அயோத்தியில் காவல்துறையினர் புதிய சோதனைகளை மேற்கொண்டனர். இதில் க்யூஆர் குறியீடு கொண்ட நன்கொடைப் பெட்டி, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு ஜூன் 23 அன்று தனது முதற்கட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 25 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சைக்கு தார்மீகப் பொறுப்பேற்று சமீபத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்தனர்.
மேலும் சிறப்பு விசாரணைக்குழுவினர் நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மாவட்டச் சிறையில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட அவினாஷ் சுக்லா என்பவரிடம் நேற்று முன்தினம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியபோது, இவ்வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து நேற்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரது வீடுகளில் அயோத்தி போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினா் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டில், காய்ந்த வைக்கோல் கட்டுகளுக்கு இடையே காவல்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டனர். விசாரணைக்காக லவ்குஷின் தந்தை பச்சு லால் மிஸ்ரா காவலில் எடுக்கப்பட்டார். நேற்று நடந்த சோதனையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20.39 லட்சம், கருணேஷ் பாண்டேவிடமிருந்து ரூ. 18.07 லட்சம், அனுகல்ப் மிஸ்ராவிடமிருந்து ரூ. 16.82 லட்சம், லவ்குஷ் மிஸ்ராவிடமிருந்து ரூ. 14.25 லட்சம், ராமசங்கர் மிஸ்ராவிடமிருந்து ரூ. 7.32 லட்சம் மற்றும் ‘டின்னு’ என்று அழைக்கப்படும் ராமசங்கர் யாதவிடமிருந்து ரூ. 1 லட்சம் ஆகிய பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், விசாரணையின் போது சுமார் 11 கிராம் தங்கம், சுமார் 375 கிராம் வெள்ளி மற்றும் 1,121 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவினாஷ் சுக்லா கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அயோத்தியில் உள்ள ஒரு யோகா மையத்திலிருந்து, ராமராஜ்ய கோஷ் என்று பெயரிடப்பட்ட பேடிஎம் க்யூஆர் குறியீடு கொண்ட நன்கொடைப் பெட்டியை காவல்துறையினர் மீட்டனர்.
அந்த மையத்தின் யோகா பயிற்சியாளரான சுந்தர் லால் கூறுகையில், காவல்துறையினர் முதலில் ஜூன் 5 அன்று அந்த வளாகத்தில் சோதனை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சுக்லா தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டதாகத் தெரிவித்தார். இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த சுமார் 400 தனியார் பாதுகாப்புப் பணியாளர்களின் பங்கும் இந்த விசாரணையில் ஆராயப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா அல்லது மோசடிக்கு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பதைக் கண்டறிய, அவர்களின் பணிப் பட்டியல்கள், சிசிடிவி காட்சிகள், வருகை மற்றும் வெளியேற்றப் பதிவுகள் மற்றும் பிற செயல்பாடுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விதிமுறைகளைப் புறக்கணித்ததாகவோ அல்லது திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவோ கண்டறியப்படும் எந்தவொரு பாதுகாப்புப் பணியாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அயோத்தி ராமர் கோயில் நிதிமுறைகேடு விவகாரத்தில் நேற்று நடந்த புதிய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* எஸ்ஐடியின் காலக்கெடு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்களை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு உத்தரப் பிரதேச அரசு 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இவ்விவகாரத்தை ஆழமாக விசாரிப்பதற்கும், விசாரணையின் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 15 வரை நீட்டித்து உத்தரவிட்ட முதல்வர் யோகி, ஜூலை 15-க்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறப்பு விசாரணை குழுவிற்கு உத்தரவிட்டார். இக்குழுவில் லக்னோ பிரிவு ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் ஐஏஎஸ், கிரண் ஐபிஎஸ், நிதித் துறை சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
* ராமர் கோயில் நன்கொடை மோசடியில் ஈடுபட்டவர்களுக்குப் புற்றுநோய் வரும் பாஜ எம்எல்ஏ சாபம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை மோசடியில் ஈடுபட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேதனையான மரணத்தை அடைவார்கள் என்று உன்னாவ் மாவட்டம் புர்வா தொகுதி பாஜ அனில் சிங் பேசிய காணொலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காணொளியில்,’ ராமர் கோயிலில் திருடியவர்களுக்கு நேரடியாகப் புற்றுநோய் வரும். இது கடவுள் அளிக்கும் மரண தண்டனையாக இருக்கும்.
ஓராண்டு காத்திருங்கள், அவர்களுக்குப் புற்றுநோய் வரும். குற்றவாளிகள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், ராமர் அவர்களைத் தண்டிப்பார்; அவர்கள் வேதனையான மரணத்தை அடைவார்கள், மேலும் கோயிலில் திருடியதற்கான விளைவுகளை அவர்களின் அடுத்த 7 தலைமுறைகளும் நினைவில் கொள்ளும் வகையில் அந்தத் தண்டனை அமையும்’ என்றார்.
* நன்கொடை மோசடியில் தொடர்பா? தனியார் பாதுகாப்பு நிறுவனம் மறுப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை நிர்வாகத்துடன் தொடர்புடைய பணத்தைக் கையாளும் பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, காணிக்கை பணத்தை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தங்களுக்கும், மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கோரிக்கையின் பேரிலேயே தாங்கள் பணியாளர்களை நியமித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட 8 பேரில், அந்தப் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குனர் கௌரவ் சிங் இதுபற்றி கூறுகையில், ‘ எங்கள் நிறுவனம் 22 பணியாளர்களைத் தேர்வு செய்து, பராமரிப்புப் பணிகளுக்காக எஸ்பிஐ-யின் அயோத்தி கிளைக்கு அனுப்பியது. அதன்பிறகு அவர்களுக்குப் பணிகளை ஒதுக்குவதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.
அந்த 22 பணியாளர்களும் எஸ்பிஐயின் அயோத்தி கிளை முதன்மை மேலாளரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பணியமர்த்தப்பட்டனர். அயோத்தியில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு பராமரிப்புப் பணியாளர்களை வழங்குவதற்காக மட்டுமே நாங்கள் ஈடுபடுத்தப்பட்டோம். அந்த ஊழியர்கள் இறுதியில் என்ன பணிகளைச் செய்தார்கள், ஏன் அவற்றைச் செய்தார்கள் என்பது குறித்து வங்கியே விளக்க வேண்டும்’ என்றார்.
* ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், சிறுநீரகப் பாதை தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 89 வயதான தாஸ் ஜூன் 29 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, அவருக்குச் சிறுநீரகப் பாதை தொற்று பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாஸ், தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் திலீப் மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருகிறார்கள்.
* ஆட்சேபனைக்குரிய பதிவு வெளியிட்டவரின் உடற்பயிற்சிக் கூடம் சீல்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கில் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டஇர்ஷாத் அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் உடற்பயிற்சிக் கூடத்தை (ஜிம்) பாலியா மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
