×

புதுச்சேரி போலி மருந்து வழக்கு சிபிஐக்கு லஞ்சம் தர முயன்ற ஐபிஎஸ் அதிகாரி கைது: ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

புதுச்சேரி: போலி மருந்து வழக்கில் சிபிஐக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (எ) ராஜா, பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை நடத்தி, ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ராஜா வீட்டில் நடத்திய சோதனையில் பல கோடிக்கு சொத்து ஆவணங்கள், தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர், இந்த வழக்கு விசாரணை எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா, ராணா, மெய்யப்பன், விவேக் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி என 4 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜாவுக்கு பல மாநிலங்களில் தொடர்பு இருந்ததால், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து சிபிஐ 2 வழக்குகள் பதிவு செய்தது.

இதனிடையே ராஜா உள்பட 26 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்காமல் முடக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மண்டல இயக்குநரை வள்ளியப்பன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் ரூ.3 கோடி கேட்டுள்ளார். இதற்காக கடந்த மாதம் 8ம் தேதி லஞ்ச பணம் பரிமாற்றம் செய்தபோது புதுவையை சேர்ந்த ராஜ்குமார், டெல்லி க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங் ஆகியோரை டெல்லியில் சிபிஐ கைது செய்தது.

மேலும், ஹவாலா ஏஜெண்ட் நாகூரான், முக்கிய குற்றவாளியான வள்ளியப்பன் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வள்ளியப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கில் இருந்த தன்னை விடுவிக்க டெல்லி இன்ஸ்பெக்டர் பிரதீப் சிங்கை சந்தித்து, அவர் மூலம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் ஒருவரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அவருக்கு முன்பணம் ரூ.1 கோடி வழங்க வள்ளியப்பன், அவரது மனைவியிடம் கூறி தயார் செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து பணத்தை தயார் செய்தபிறகு, சென்னையில் உள்ள ஹவாலா ஏஜெண்டுக்கு பாதுகாப்பாக எடுத்த செல்ல, புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த அரசியல் பிரமுகர், புதுச்சேரியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் பாதுகாப்புடன் பணத்தை சென்னை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து, கடந்த மாதம் 10ம் தேதி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மண்டல இயக்குநர் ஹரியானாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், புதுச்சேரி போலி மருந்துகள் விற்பனை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளில், தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு உதவுவதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சட்டவிரோத லஞ்சம் கோரியது தெரியவந்தது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஹரியானாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தீபக் கஹ்லாவத்தை நேற்று கைது செய்தனர். மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்ததில் பல டிஜிட்டல் சாதனங்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Puducherry ,IPS ,CBI ,Central Quality Control ,Agra, Uttar Pradesh ,Rediyarpalayam… ,
× RELATED அரசியலமைப்பு, ஜனநாயக...