புதுடெல்லி: டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ரூ.14,115 கோடி மதிப்பிலான 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், டெல்லியில் தேசிய நெடுஞ்சாலை என்எச்-148ஏஇ-ன் ஒருபகுதியாக, துவாரகா அதிவேக நெடுஞ்சாலையை நெல்சன்மண்டேலா சாலை, வசந்த் குஞ்ச் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.
8.1 கிமீ நீளமுள்ள இந்த திட்டம் ரூ.6,969 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை என்எச்-34ன் கான்பூர்-கப்ராய் இடையிலான 117.7 கிமீ நீளப் பகுதியை 4 அல்லது 6 வழிச்சாலையாக அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இச்சாலை, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு, வெளியேறும் பகுதிகள் கொண்ட பசுமைவழிச் சாலையாக இருக்கும். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.7,145 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
