போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி; முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் உதவி கமிஷனர் சரண்யா தீவிர விசாரணை: சென்னை மத்திய குற்றப்பிரிவு தகவல்

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் ஆஜரானர். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சரண்யா தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(65) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன்(60) என்பவர் தனக்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், உனது மகனுக்கு போக்குவரத்து துறையில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் பணம் பெற்று கொண்டார்.

ஆனால் சொன்னபடி எனது மகனுக்கு வேலை பெற்று தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அவர் என்னை அமைச்சர் சிவசங்கரிடம் நேரடியாக அழைத்து சென்றார். அப்போது அவர் ‘பயப்பட வேண்டாம் வேலை கட்டாயம் கிடைக்கும் என்று’ உறுதி அளித்தார். அனால் இதுவரை எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே பணததை பெற்று கொண்டு மோசடி செய்த இளஞ்செழியன் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, இளஞ்செழியன் என்பவர் மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து கடந்த 24ம் தேதி இளஞ்செழியனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை தொடர்ந்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார்.

அப்போது விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் சரண்யா மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானசித்ரா ஆகியோர் போக்குவரத்து துறையில் உதவி பொறியாளர் பணிக்கு ரூ.23 லட்சம் பெற்றது உண்மையா? பாதிக்கப்பட்ட நபர் உங்களை அலுவலகதில் வந்து சந்தித்தது உண்மையா? இந்த மோசடிக்கும் உங்களுக்கு என்ன தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அளித்த பதிலை விசாரணை அதிகாரி வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர். வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: