?ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு இறைவனை வழிபடும் பழக்கம் எப்படித் தோன்றியது?
– டி.நரசிம்மராஜ், மதுரை.
ஆடி என்றால் அம்மன், புரட்டாசி என்றால் பெருமாள் என்று இந்த இரண்டு மாதங்களைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் எல்லா தெய்வங்களையுமே வணங்கி வருகிறார்களே. இதுகூட நம் தமிழகத்தில் பின்பற்றி வரும் நடைமுறையே. தமிழகம் தாண்டி மற்ற இடங்களில் புரட்டாசியில் வரும் நவராத்திரியைத்தான் அம்மனுக்கு உகந்த காலமாக கொண்டாடுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எல்லா மாதங்களும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தவைதான். ஆடி மாதத்தில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வேப்பிலை கட்டுவதும், கூழ் ஊற்றுவதும் நம்மிடையே பழக்கமாக உண்டாகி, அது அப்படியே அம்மனுக்கு உரிய மாதமாக மாறிவிட்டது. திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கின்ற நேரமாதலால், புரட்டாசி என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களுமே எல்லா தெய்வங்களுக்கும் உகந்தவைதான் என்பதே நிதர்சனமான உண்மை.
?புத்தாடைகளை எந்தெந்த நாட்களில் அணிய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முன்னோர் வழிபாட்டுக்குரிய நாட்களைத் தவிர, மீதமுள்ள எல்லா நாட்களிலும் நமது சௌகரியப்படி புத்தாடைகளை அணியலாம். குறிப்பாக பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போது, கண்டிப்பாக புத்தாடைகளைத்தான் அணிய வேண்டும். அதே போல, குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போதும், புத்தாடைகளை அணிந்து செல்வது விசேஷமான பலனைத் தரும்.
?மாந்த்ரீகம் – தாந்த்ரீகம் என்ன வேறுபாடு?
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
வேதமந்திரங்களின் துணையுடன் பூஜை மற்றும் ஹோமங்களைச் செய்யும்போது, வைதீகமுறை, தாந்த்ரீகமுறை என்று இருவிதமான முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பெரும்பாலும், பரிகார சாந்தி ஹோமங்களுக்கு தாந்த்ரீகமுறை பின்பற்றப்படுகிறது. மாந்த்ரீகம் என்பது வேறு. மந்திரங்களைப் பயன்படுத்தி துஷ்டசக்திகளை துரத்துதல், ஏவுதல் என்று எதிர்மறை சக்திகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை மாந்த்ரீகம் என்று சொல்கிறார்கள். இந்த முறையில், விதிகள் சற்று பிசகினாலும் அது பிரயோகிப்பவரையே தாக்கிவிடும் அபாயமும் உண்டு. தாந்த்ரீக முறைப்படி பூஜை செய்து இறைவனை வணங்கினாலே, துஷ்ட சக்திகள் எதுவும் நம்மை அண்டாது.
?கருப்புப் பூனை வீட்டிற்குள் நுழைந்தால் அபசகுனமா?
– எஸ்.கதிரேசன்,வேலூர்.
இல்லை. முதலில் வீட்டிற்குள் நாய், பூனை உட்பட எந்த பிராணிகளும் அதற்குரிய இடத்தில்தான் இருக்க வேண்டும், பசுமாடுகூட கோபூஜை செய்யும் நேரத்தில் மட்டும்தான் வீட்டிற்குள் வரவேண்டும். கோபூஜை முடிந்த கையுடன் பசுவினையும் தோட்டத்தில் உள்ள கொட்டகையில்தான் கட்டிவைக்க வேண்டும். கருப்புப் பூனை என்பது அதிர்ஷ்டத்தின் உருவமாகவே மேலைநாட்டில் பார்க்கப்படுகிறது. கருப்புப் பூனை என்பது பாதுகாப்பினைத் தருவது என்று நம்புகிறார்கள். பெரும்பாலும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சுற்றி பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு கருப்புப்பூனைப் படை என்றுதானே பெயர் வைத்திருக்கிறார்கள். ஆக, கருப்புப் பூனை என்பது அபசகுனம் அல்ல.
?நமது வேண்டுதல் நிறைவேறாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
– த.நேரு, வெண்கரும்பூர்.
எது நமக்குத் தேவையோ, எந்த ஒரு விஷயத்தை நம்மால் தாங்க முடியுமோ அதைத்தான் இறைவன் நமக்குத் தந்துகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது வேண்டுதல் நிறைவேறவில்லை என்று சொன்னால், நாம் வேண்டிக்கொண்ட விஷயம் நமக்கு நன்மையைத் தராது என்று இறைவன் அதனை நமக்குத் தரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள், இறைவனின் சந்நதிக்குச் செல்லும்போது, தனியாக எந்த ஒரு வேண்டுதலையும் முன் வைக்காமல், எது எனக்கு நன்மையைத் தருமோ அதனை நீ அறிவாய், எனக்கு நன்மையை செய்வது போல இந்த உலகத்தில் உள்ள யாவருக்கும் நீ நன்மையைச் செய்தருள வேண்டும் என்ற பொருளில், “சர்வே ஜனா: சுகினோ பவந்து’’ என்ற பிரார்த்தனையை முன் வைப்பார்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டாலே, வாழ்க்கையில் துன்பம் என்பது இருக்காது.
?ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமையாக இருந்தால் நல்லது?
– கேசவமூர்த்தி, சென்னை.
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். வேறு எந்த கிரகம் வலிமையோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், சந்திரன் வலிமையோடு இருக்க வேண்டும். காரணம், சந்திரன் மன ஆற்றலைக் குறிக்கிறது. உங்களை வீழ்த்துகின்ற முதல் காரணி உங்கள் மனம், பலவீனமடைவதுதான். உங்கள் தெளிவைக் குறைப்பதும் குழப்புவதும் மயங்க வைப்பதும் மனம்தான். ‘‘மாயை என்று ஒருத்தி, தன்பால் மனம் என்னும் மைந்தன் தோன்றித் தூய நல்லறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்’’ என்பார் வில்லிபுத்தூராழ்வார். உங்கள் மனதைக் கலைத்துவிட்டால், அல்லது கலைந்துவிட்டால் எல்லாம் போய்விட்டது என்று அர்த்தம். தெளிவும் மனவலிமையும் குறிக்கும் குறியீடுதான் சந்திரன். சந்திரன் பலவீனமாக இருப்பவர்கள், எப்பொழுதும் குழப்பமான மனநிலையிலும், எடுப்பார் கைப் பிள்ளையாகவும், வைராக்கியம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
‘‘பிறந்ததிலிருந்து என் ராசி சரியில்லை என்று ஒருவர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருடைய ஜாதகத்தில் சந்திரன் பல வீனம் என்று அர்த்தம். அந்தச் சந்திரனை பலப்படுத்த வேண்டும். மனதை பலப் படுத்த வேண்டும். தெளிவாக்க வேண்டும். அதற்கான ஒரு வழிதான் ஆலயம், தியானம், வழிபாடு எல்லாம்.
?ஏன் தட்சிணாமூர்த்தி கோயில்களில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்?
– வனிதா செல்வராஜ், திருச்சி.
ஆன்மாக்கள் வடக்கு நோக்கி செல்வது, சரண யாத்திரை என்பார்கள். தெற்கு நோக்கி செல்வது, மரண யாத்திரை என்பார்கள். ஆன்மாக்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, அதாவது தன்னை நோக்கி வருவதற்காக தட்சிணாமூர்த்தி தென்திசையில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார், இதில் இன்னொரு முக்கியமான விஷயம் பாருங்கள், சைவத்தில் கோயில் என்றால், சிதம்பரத்தைக் குறிக்கும். வைணவத்தில் கோயில் என்றால், ஸ்ரீ ரங்கத்தைக் குறிக்கும். ஸ்ரீ ரங்கத்தில் பெருமாளும், சிதம்பரத்தில் நடராஜரும் தெற்கு நோக்கித் தான் எழுந்தருளி இருக்கிறார்கள். காரணம், ஆன்மாக்களுக்கு சரணம் தருவதற்காக.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.
